ஐக்கிய இராச்சியத்தின் நிறுவன ஆளுகை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவன ஆளுகையின் கோட்பாடுகள் மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிலையத்துடன் இணைந்து இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் திரட்டப்பட்டுள்ள நிறுவன ஆளுமை தொடர்பான மிகச் சிறந்த நடைமுறை விதிகள் மூலமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள உயர் மட்டத்திலான நிறுவன ஆளுமை தேவைப்பாடுகளின் நடைமுறைகளை பின்பற்றுவதை லாஃப்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிட்டெட் உறுதிப்படுத்தி வருகின்றது.
பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பங்குதாரர்கள் மற்றும் சட்டரீதியான அமைப்புக்கள் மற்றும் நிறுவனத்துடன் தொடர்புபட்ட ஏனைய அனைத்து தரப்பினருக்கும் முற்றிலும் பொறுப்புடமை கொண்டவர்களாகச் செயற்படுவதுடன், முதலீட்டார்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கான கட்டமைப்பு மற்றும் உறுதியான நிறுவன ஆளுகை சூழலைத் தோற்றுவித்து, நிலைபேற்றியலைப் பேணுகின்ற வளர்ச்சியை நிறுவனம் அடையப்பெறுவதை உறுதிசெய்து வருகின்றனர்.
நிறுவனத்தின் நிலைபேற்றியல் கொண்ட வளர்ச்சியை உறுதிப்படுத்தியவாறு, பங்குதாரர்களுக்கான பெறுமதியை அதியுச்ச திறன் கொண்ட பெறுபேறுகளாக வழங்கி, முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற முகாமைத்துவ முறைமைகளை மேற்கூறப்பட்ட நிறுவன ஆளுகை கட்டமைப்பு தழுவியுள்ளதுடன். இதற்கு அமைவாகவே உள்ளக மற்றும் வெளியக கட்டமைப்புக்களின் முக்கிய கூறுகள் அனைத்தும் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளதுடன், நிறுவனத்தின் நிறுவன ஆளுகை கட்டமைப்பும் இதற்கமைவாகவே கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
பங்குதாரர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் நிலைபேற்றியல் கொண்ட பெறுமதியைத் தோற்றுவித்து, அதனை வழங்குவதுடன், நிறுவனத்துடன் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் மிகச் சிறந்த வகையில் நன்மை பயக்கின்ற வகையில், ஒழுக்காற்று மற்றும் சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டு, உயர்ந்த மட்டத்திலான நிறுவன கோட்பாட்டு நடைமுறைகளுக்கு இணங்க நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் வியாபார விவகாரங்கள் அனைத்தும் பேணப்பட்டு, பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பை பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கொண்டுள்ளனர்.
முகாமைத்துவ அணியானது குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையிலான வியாபார மூலோபாயங்களை விருத்தி செய்வதற்குத் தேவையான தொழில்வாண்மை தலைமைத்துவம் மற்றும் மூலோபாய வழிகாட்டலை வழங்குவது பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் பொறுப்பாகும். வரவு செலவுத் திட்டமிடலுக்கு தேவையான வழிகாட்டலை வழங்கி அவற்றை மீளாய்வு செய்தல், மனித வள முகாமைத்துவம். நிறுவன ஆளுகை, சட்ட இணக்கப்பாடு, உள்ளக கணக்காய்விற்கு உதவுதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவம், பாரிய மற்றும் கணிசமான தொகை கொண்ட முதலீடுகளை அங்கீகரித்தல் மற்றும் மீளாய்வு செய்தல் போன்ற செயற்பாடுகளின் பொறுப்பினை ஏற்று, நிறுவனத்தில் நிலைபேற்றியல் கொண்ட அபிவிருத்தியை உறுதி செய்து, அதன் மூலமாக முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், சம்பந்தப்பட்ட ஏனைய அனைத்து தரப்பினரதும் நலன்களையும் உறுதி செய்வது இவர்களது பொறுப்பாக உள்ளது. இத்தகைய வியாபார மூலோபாயங்கள் அனைத்தும் காலத்திற்கு காலம் பொருத்தமான வகையில் பணிப்பாளர் சபையின் மீளாய்விற்கு உட்படுத்தப்படுகின்றன.
பல்வேறுபட்ட திறமைகள் மற்றும் தொழிற்துறை அனுபவங்களின் இணைப்பைக் கொண்டுள்ளவர்களை லாஃப்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிட்டெட் நிறுவனம் எப்போதும் தனது பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக நியமித்து வந்துள்ளது. உள்ளக கட்டுப்பாடு தொடர்பான நிறுவனத்தின் முறைமைகளுக்கு பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பொறுப்பாக உள்ளதுடன், அவற்றின் திறன்களை தொடர்ச்சியான அடிப்படையில் மீளாய்வு செய்து, உள்ளக குழும இடர் மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் மூலமாக பரிந்துரைகளை முன்வைக்கின்றனர். இங்கு கூறப்பட்ட உள்ளக கட்டுப்பாட்டு முறைமைகள் நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகள் தொடர்பான இடர்கள் மற்றும் ஏனைய விவகாரங்களை முகாமைத்துவம் செய்வதுடன், வியாபார தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, வெளியிடப்படுகின்ற நிதியியல் சார்ந்த தகவல்கள் நம்பகமானவை என்பதை உறுதிப்படுத்துகின்றன. மேலும் வெளியிடப்படுகின்ற நிதியியல் சார்ந்த தகவல்கள் அனைத்தும் உண்மையானவை மற்றும் துல்லியமானவை என்பதையும் தாம் இத்தகவல் தொடர்பாக பூரண திருப்தியைக் கொண்டுள்ளனர் என்பதையும் பணிப்பாளர் சபை உறுதிப்படுத்துவதுடன், நிறுவனத்தின் நிதி சார் கட்டுப்பாடுகளின் திறன் மற்றும் இடர் முகாமைத்துவம் தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் முறைமைகள் அனைத்தையும் உறுதி செய்வது அவர்களின் பொறுப்பாகும்.
பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ஒன்றுசேரவும், தனிப்பட்ட அடிப்படையிலும் தமது கடமைகள் அனைத்தையும் நிறுவனத்தின் சட்ட மற்றும் ஒழுக்காற்று விதிமுறைகளுக்கு அமைவாக முன்னெடுப்பதுடன், குறித்த சட்ட மற்றும் ஒழுக்காற்று நடைமுறைகள் அனைத்தையும் நிறுவனமும், அதன் துணை நிறுவனங்களும் கடைப்பிடிக்கின்றன என்பது தொடர்பான நடைமுறைகள் மற்றும் தொழிற்பாடுகளையும் பணிப்பாளர் சபை உறுதி செய்கின்றது.
சுயாதீனமான மற்றும் குறிக்கோள் மிக்க தீர்மானங்களை மேற்கொள்ளுதல், உத்தேச திட்டங்களை ஆராய்தல், நிறுவன மற்றும் வியாபார மூலோபாயம்,பெறுபேற்றுத்திறன் தொடர்பான பிரச்சனைகளுக்கு நிறுவனத்தின் முகாமைத்துவ அணி முன்வைக்கும் பரிந்துரைகளை ஆராய்தல் மற்றும் வளங்களின் பிரயோகம் மற்றும் வியாபார நடத்தை ஆகியவற்றிற்கு பணிப்பாளர் சபை உறுப்பினர்களே பொறுப்பாக உள்ளனர். சவாலான பங்களிப்புக்களைக் கொண்ட ஒரு சூழலை பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ஊக்குவிப்பதுடன், அவர்களின் தொழில்சார் அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தமது சுயாதீன பகுப்பாய்வினை முன்வைக்குமாறு அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
பணிப்பாளர் சபை நடைமுறைகள் தொடர்பான விடயங்கள் மற்றும் விதிகள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான சந்தேகங்கள் அனைத்திற்கும் எந்தவொரு பணிப்பாளர் சபை உறுப்பினரும் நிறுவன காரியதரிசியின் ஆலோசனையையும், சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் திறன்மிக்க வழியில் தமது பொறுப்புக்களை முன்னெடுத்து, தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு பணிப்பாளர் சபைப் பத்திரங்கள், தகவல் பத்திரங்கள் மற்றும் அறிக்கைகள் தேவையான நேரங்களில் காலந்தவறாது வழங்கப்பட்டுவருகின்றன.
வெளிப்புற வியாபார கருத்து வேற்றுமை சார்ந்த முரண்பாடுகள் அனைத்தையும் தவறாது வெளிப்படையாக பகிர்ந்துகொள்வது பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் கடமையாக உள்ளதுடன், வியாபார விவகாரங்கள் சார்ந்த அக்கறைகள் மற்றும் தனிப்பட்ட ரீதியிலான உறவு முறைகள் மற்றும் கடப்பாடுகள் போன்ற பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் சுயாதீனமான தீர்மானங்களில் செல்வாக்கைச் செலுத்தக்கூடிய விடயங்கள் அனைத்தையும் அவர்கள் மறைக்காது வெளிப்படுத்தல் வேண்டும்.
காலத்திற்கு காலம் எழக்கூடிய ,அவ்வாறான வியாபாரம் சார்ந்த முரண்பட்ட கருத்து வேற்றுமைகளை வெளிப்படுத்துவதற்கு பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் முடிந்த வரை முயற்சி செய்ய வேண்டும்.
குழும இடர் மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் ஈடுபாட்டுடன், நிறுவனத்தின் சொத்துக்களைப் பாதுகாத்து, முறையாகப் பேணி, நடைமுறையிலுள்ள கணக்கியல் கோட்பாடுகளுக்கு அமைவாக துல்லியமாக கணக்கு பதிவு வைக்கப்படுவதை பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உறுதி செய்கின்றனர். முகாமைத்துவ தகவல்கள் அனைத்தையும் சரியாக வழங்கி, தேவையான நடைமுறைகளுக்கு அமைவாக வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதையும் அவர்கள் உறுதி செய்கின்றனர். நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் உள்ளக கணக்காய்வுத் தொழிற்பாடுகளை உள்ளடக்கும் இடர் மீளாய்வு நிகழ்ச்சித்திட்டங்கள் நிறுவனத்தின் உள்ளக கணக்காய்வு அணியால் கண்காணிக்கப்படுவதுடன், பணிப்பாளர் சபைத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளரின் நேரடி மேற்பார்வைக்கு உட்பட்டவை.
அனைத்து ஊழியர்களும் நேர்மையுடனும், குறிக்கோளுடனும், அக்கறையுடனும் தமது கடமைகளை முன்னெடுத்து, வர்த்தக மற்றும் விலை தொடர்பான அந்தரங்க தகவல்களின் இரகசியத் தன்மையைப் பேணி, பொருத்தமான சட்டங்கள் மற்றும் ஒழுக்காற்று நடைமுறைகளுக்கு அமைவாக பணியாற்றி, நிறுவனத்தின் சொத்துக்களைப் பாதுகாத்து, நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் நடத்தையைப் பேணுவது தொடர்பான நடத்தை விதிகள் மற்றும் தொழில்தர்ம விதிகளை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. முரண்பட்ட அக்கறைகள், இலஞ்சம் மற்றும் ஊழல், களியாட்டம் மற்றும் அன்பளிப்புக்கள், துல்லியமான கணக்கியல் மற்றும் பதிவு பேணல், நிறுவன வாய்ப்புக்கள், அந்தரங்கம், நியாயமான கொடுக்கல் வாங்கல், நிறுவனத்தின் சொத்துக்களை பாதுகாத்தல் மற்றும் முறையாகப் பேணுதல், சட்டங்கள் மற்றும் ஒழுக்காற்று விதிமுறைகளுக்கு கட்டுப்படுதல் மற்றும் எவ்விதமான சட்டவிரோதமான அல்லது தொழில்தர்மத்திற்கு முரணான நடத்தைகள் தொடர்பில் அறியும் பட்சத்தில் அவற்றை பகிரங்கப்படுத்துவதை ஊக்குவித்தல் ஆகியவை தொடர்பாக எழுகின்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு இந்த நடத்தை மற்றும் தொழில்தர்ம விதிகள் உதவுகின்றன.
சட்டம் மற்றும் ஒழுக்காற்று தொடர்பான பிரச்சனைகள்,தேசிய மட்டத்திலான பொருளாதார எதிர்வுகூறல்கள் மற்றும் இவை தொடர்பான ஏனைய விடயங்களுக்கு தேவையான தொழிசார்ரீதியான சுயாதீன ஆலோசனையை பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
லாஃப்ஸ் குழுமம் தனது வியாபார முயற்சிகளை பல்வேறு துறைகளுக்கும் விஸ்தரித்துள்ள நிலையில் இடர் முகாமைத்துவம் முக்கியம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது. முக்கியமான இடர்க்களை முன்கூட்டியே இனங்கண்டு, திறன்மிக்க வழியில் முகாமைத்துவம் செய்து அதன் மூலமாக பங்குதாரர்களின் பெறுமதியைப் பாதுகாப்பதை உறுதிசெய்வதற்காக இடர் முகாமைத்துவ முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக இடர்க்களைக் குறைப்பது மற்றும் நீக்குவது, மிகவும் விரும்பப்படுகின்ற மற்றும் நம்பப்படுகின்ற இலங்கை பல்தேசிய நிறுவனமாக மாறவேண்டும் என்ற லாஃப்ஸ் நிறுவனத்தின் குறிக்கோளை அடைந்து கொள்வதற்கு உதவும்.
இடர் தொடர்பான பகுப்பாய்வுகளை மேற்கொள்ளல், இடர்களை அகற்றும் அல்லது குறைக்கும் மூலோபாயங்களை அமுலாக்கம் செய்தல், எழக்கூடிய இடர்கள் தொடர்பில் நிறுவனத்திற்கு முற்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் முறைமை ஒன்றை அறிமுகம் செய்தல் போன்றவற்றை பிரதானமாக உள்ளடக்கியுள்ள தொழிற்துறை இடர் முகாமைத்துவ முறைமை ஒன்றை நிறுவனம் பின்பற்றி வருகின்றது.
சூழல், சந்தை மற்றும் உள்ளக முறைகேடுகள் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களிலிருந்து குழுமத்தைப் பாதுகாப்பதே இடர் முகாமைத்துவ நடைமுறையின் நோக்கமாகும். இத்தகைய ஆபத்துக்களைக் குறைத்து, குழும நிறுவனங்களின் நிலைபேற்றியலைப் பேணுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தீ விபத்து அல்லது விபத்துக்கள் போன்ற பாதிக்கும் சம்பவங்களிலிருந்து எமது ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களைப் பாதுகாப்பதற்கும், ஏற்பாட்டு வசதிகள், தரவு, பதிவுகள் மற்றும் எமக்குச் சொந்தமான அல்லது நாம் உபயோகிக்கின்ற சொத்துக்களை பாதுகாப்பதற்கும் உதவும் வகையில் இடர் முகாமைத்துவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் நிகழுகின்ற போது நிறுவனத்தின் தொழிற்பாடுகள் தடையின்றி, கட்டுப்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்படுவதற்கு இடமளிக்கும் கட்டமைப்பொன்றினை குழுமத்திற்கு வழங்குவதற்கு இந்த நடைமுறை இடமளிப்பதுடன்., தீர்மானம் எடுத்தல், வியாபாரச் செயற்பாடுகள், எதிர்பாராத நிகழ்வுகள்,செயற்திட்ட வாய்ப்புக்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை தெளிவாக கண்டறியும் வகையில் முற்றுமுழுதான, கட்டமைக்கப்பட்ட வகையில் திட்டமிடல் மற்றும் முன்னுரிமையளித்தல் ஆகியவற்றிற்கும் இது இடமளிக்கின்றது.
குழும நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உள்ளக மற்றும் வெளியக இடர்களை இனங்கண்டு, அவற்றிற்கு முகங்கொடுப்பதற்கு கட்டுப்பாட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதே இடர் முகாமைத்துவத்தின் நோக்கமாகும். குழுமத்தின் இடர் மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவானது நிறுவனங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உள்ளக மற்றும் வெளியக ஆபத்துக்களை இனங்காணும் முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.
இடரின் தன்மை மற்றும் அதன் பாரதூரம் ஆகியவற்றின் அடிப்படையில் இடரை முகாமைத்துவம் செய்யும் மூலோபாயங்களை நிறுவனம் கடைப்பிடிப்பதுடன், அதனை பின்வரும் வழிமுறையில் விபரிக்க முடியும்,
லாஃப்ஸ் குழுமத்திற்காக தனித்துவமாக தயாரிக்கப்பட்ட இடர் பதிவேட்டை உபயோகித்து கட்டமைப்பு,தொழிற்பாடு, நிதியியல் மற்றும் சூழல்ரீதியான ஒட்டுமொத்தமான இடர் மதிப்பீட்டை குழும இடர் மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு 2014/15 இல் முன்னெடுத்திருந்தது. இதன் மூலமாக ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் கட்டுப்படுத்தும் திட்டங்களை மதிப்பீடு செய்திருந்தது. இதன் போது இனங்காணப்பட்ட இடர்கள் தொடர்பில் குழும நிறுவனங்களின் முகாமைத்துவத்திற்கு அறிவிக்கப்பட்டு, தாக்கம் தொடர்பாக ஆராயப்பட்டு, அந்த இடர்களைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இடருக்கு தீர்வு காணுதல் மற்றும் அவற்றைக் கண்காணித்தல் ஆகியன தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதுடன், இது குழுமத்தின் இடர் மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவைப் பொறுத்த வரையில் நிலைபேற்றியல் கொண்ட இடர் முகாமைத்துவத்திற்கு மிகவும் முக்கியமாக அமைந்துள்ளது. பிரதானமான இடர்கள் அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவானவையாகக் காணப்படுவதுடன், இடர் தொடர்பான மீளாய்வின் போது இவை குழுமத்திற்கு நீண்ட கால அடிப்படையில் தாக்கம் விளைவிக்கக்கூடியவை என முகாமைத்துவத்தால் இனங்காணப்பட்டுள்ளது.மேலும், ஒவ்வொரு நிறுவனத்தினதும் இடர் பதிவேடு மற்றும் கட்டுப்படுத்தல் திட்டம் ஆகியன சிரேஷ்ட முகாமைத்துவத்திற்கும், கணக்காய்வு சபைக்கும் அவர்களின் மீளாய்விற்காக சமர்பிக்கப்பட்டுள்ளது.